கடற்கரை பகுதியில் வீற்றிருந்த அந்த பங்களாவின் முன்புறம் அமைக்கப்பட்டிருக்கும் தோட்டத்தில் வெகு சிரத்தையோடு வேலை பார்த்துக் கொண்டிருந்த வேலையாட்கள், அந்த நேரம் ஜாக்கிங் முடித்து விட்டு உள்ளே நுழைந்த அர்ஜுனைக் கண்டு மரியாதையாய் வணக்கம் செலுத்தவும் அவனோ அவர்களைக் கண்டு கொள்ளாது வீட்டிற்குள் நுழைந்தான்.
வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் அவனின் செல்வசெழிப்பை பறைசாற்றியது. ஹாலில் இருக்கும் பொருளை மிகுந்த கவனத்தோடு ஒரு பணியாள் துடைத்துக் கொண்டிருக்க உள்ளே நுழைந்த அர்ஜுன் அன்றைய நாளிதழோடு சோபாவில் அமர்ந்தான்.
அவன் வந்ததை உணர்ந்து சமையலறையில் இருந்த பணியாள் ஒருவர் காஃபியோடு அவனை நெருங்க அதை வாங்கி பருகியவன் சட்டென்று கீழே துப்பிவிட்டு காஃபி கோப்பையைத் தூக்கி எறிந்தவனின் கரம் பணியாளின் கன்னத்தை பதம் பார்த்தது.
“ஒரு காஃபி ஒழுங்கா போட தெரியாது?” என்று கத்தியவனின் சத்தத்தில் ஃப்ளவர் வாஷைத் துடைத்துக் கொண்டிருந்த பணியாள் பதற்றத்தில் கை தவறவும் அது கீழே விழுந்து உடைய ஆத்திரத்தோடு அவனைப் பார்த்தான் அர்ஜுன்.
அவன் பார்வையில் அந்த பணியாளும் நடுங்கி நிற்க, “உங்களலாம் யார் வேலைக்கு வச்சது?” என்று ஆத்திரத்தில் கத்தும் நேரம்,
“அஜூ கண்ணா! காலையிலே எதுக்கு டென்ஷன் ஆகுற?” பரிவாய் கேட்டப்படி வந்த தன் அன்னை சுசித்ராவை முறைத்தவன்,
“எதுக்கு மாம்? இந்த மாதிரி இடியட்கள வேலைக்கு வச்சிருக்கிங்க? முதல்ல வெளிய அனுப்புங்க? ஒரு காஃபி கூட ஒழுங்கா போட தெரியல…” என்று சீறவும்,
பணியாட்களை அங்கிருந்து போக சொன்ன சுசித்ரா மகனின் அருகில் அமர்ந்தார்.
“வர வர உன் கோபத்துக்கு எல்லையே இல்லாம போய்ட்டு இருக்கு. சின்ன விஷயத்துக்குலாம் யாராவது டென்ஷன் ஆவாங்களா?” தண்மையாகவே பேச,
“இது சின்ன விஷயமா? காலையிலே மூட் அவுட் பண்றானுங்க…” அவன் பொரிய,
“ஒரு கல்யாணத்த பண்ணிக்கிட்டா உனக்கு பிடிச்ச மாதிரி உன் பொண்டாட்டியே காஃபி போட்டு தருவா…” கிடைத்த வாய்ப்பில் மகனின் திருமணத்திற்கு அடிபோட,
அவரை நக்கலாகப் பார்த்தவன், “ஒரு காஃபிக்காக காஃபி ஷாப்ப கூட வாங்கலாம். ஆனா கல்யாணம்? நெவ்வர் மாம்! கிடைக்கிற கேப்ல என் மேரேஜ் பத்தி பேசி நீங்களும் என் கோபத்துக்கு ஆளாகாதிங்க…” என்றவன் விறுவிறுவென்று தன்னறைக்குச் செல்ல அவனை இயலாமையோடு பார்த்தார்.
மகனின் அழகையும் திறமையையும் அவனின் ஆளுமையான தோற்றத்தையும் கண்டு பல தொழிலதிபர்கள் தங்கள் மகளை அர்ஜுனுக்கு மணமுடிக்க எண்ணி தாமாக முன் வந்து அவரிடம் பேசிவிட்டனர்.
அவருக்கும் மகனை மணகோலத்தில் காண ஆசை தான்.
எனினும் மகன் அதற்கு பிடி கொடுக்க வேண்டுமே?
தொழில் தொழில் என தொழிலையேக் கட்டிக்கொண்டு அலைபவன், என்று தான் இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பானோ என அன்னையாய் தவித்துப் போனார் அவர்.
தன் அறைக்குச் சென்ற அர்ஜுன் குளித்து முடித்து உடை மாற்றுவதற்காக கபோர்டைத் திறந்தவனின் கண்களில் அங்கே ஓரமாக வைக்கப்பட்டிருந்த சிறு பெட்டி விழவும் அதை எடுத்துப் பார்த்தவனின் மனதில் ஒரு யுவதி வந்து போனாள்.
மனம் எதை எதையோ எண்ணி கொண்டிருக்க அவன் கண்களோ அதிலிருந்த மாங்கல்யத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.
அந்த மாங்கல்யத்தை கழட்டி அவன் கையில் கொடுத்து விட்டு அவள் சென்றுவிட்டாள். ஏனோ அவனால் தான் அவளையும் அந்த நாளையும் மறக்க முடியாமலே போனது.
அதை வைத்திருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்பது புரிந்தாலும் ஏனோ தூக்கியெறிய தான் மனம் வரவில்லை. அவள் நினைவாக அது மட்டும் தான் இருக்கிறது என்பதாலா? இல்லையே அவள் நினைவாக உயிருள்ள ஒரு ஜீவனும் இருக்கிறதே.
பின்பு எதற்காக இத்தனை வருடமாக அதை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறான்? அதை அவனுமே அறியான்.
நேரம் ஆவதை உணர்ந்து வழக்கம் போல தன் உணர்வுகளையும் மறைத்துக் கொண்டு விரைவாக தயாராகி வந்தவனுக்கு உணவு பரிமாறிய சுசித்ரா மகனிடம் எப்படியாவது திருமணத்திற்கு சம்மதம் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவனின் முகத்தையே பார்த்திருக்க, தாயின் மனம் புரிந்தவனும் அவர் பேசுவதற்கு வாய்ப்பே கொடுக்காது போனை எடுத்து யாருக்கோ அழைத்தான்.
“வேலை முடிஞ்சுதா சிவா?”
“சார் அது வந்து…” மறுமுனையில் இருப்பவன் தயங்க,
அதில் பொறுமையிழந்தவன், “சே யெஸ் ஆர் நோ?” என்று கர்ஜிக்க,
“சாரி சார். ஜிகே கம்பெனி எம்.டி நேசிகா மேடம் ஒத்து வராதது தெரிஞ்சிக்கிட்டு மத்தவங்களும் பின் வாங்குறாங்க…” பதற்றத்தோடு சொல்ல,
“இந்த அர்ஜுன் யாருன்றத மறந்துட்டானுங்களா? யார் கொடுத்த தைரியத்துல பின்வாங்குறானுங்க? இன்னைக்கு ஒரு நாள் தான் டைம் அதுக்குள்ள எல்லாருக்கும் கொடுக்க வேண்டியத செட்டில் பண்ணிடு, நாளைக்கு ரிஜிஸ்ட்ரேஷனை முடிக்கணும்…” என சீறியவன்,
“அவளும் எத்தனை நாளைக்கு விட்டு கொடுக்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிப்பா? அவளா கொடுக்கலனா கொடுக்க வைப்பேன்…” என்று போனை அணைத்தவனை சுசித்ரா பார்க்கவும்,
அவனோ, “வீட்டுல உங்க தொல்லைனா வெளிய அவ தொல்லை. என்னை பத்தி என்ன நினைச்சிட்டு இருக்கா? இடம் தெரியாம மோதுனா என்ன ஆகும்னு சீக்கிரமே அவளுக்கு புரிய வைக்கிறேன்…” என்றவன் பாதி சாப்பாட்டிலே கையைக் கழுவிவிட்டு வெளியேற சுசித்ரா அவனை வேதனையோடு பார்த்தார்.
தொழிலை வெற்றிகரமாக நடத்தும் இளம் தொழிலதிபன் அவன். எதிரிகளின் பலவீனம் அறிந்து அவர்களை அழிக்கும் தந்திரக்காரன். அழகும் அறிவும் சேர்ந்து ஆண்மையின் இலக்கணமாய் இருப்பவனுக்கு கொஞ்சம் கர்வமும் சேர்ந்தே இருந்தது.
தந்தைக்குப் பிறகு தொழிலைக் கையில் எடுத்தவனுக்கு இதுவரை தோல்வி என்ற ஒன்றே கிடைத்ததில்லை.
ஆனால், நேசிகா ஜி.கே கம்பெனி பொறுப்பை ஏற்றதில் இருந்து அர்ஜுனுக்கு வெற்றிக்கனியை எட்டாகனியாக்கும் முனைப்பில் இருந்தாள். முதலில் அவளை அலட்சியப்படுத்தியவனுக்கு இப்பொழுது பெரும் தலைவலியாக வந்து நின்றாள் அவள்.
வீட்டை விட்டு வெளியே வந்த அர்ஜுன் நேராக சென்றது அவனது ஃபேக்டரிக்கு தான். அங்கு தன் வேலையை விரைவாக முடித்தவன் தொழிற்சாலையின் பின்பக்கம் இருந்த குடோனுக்கு செல்ல அங்கே அவனுக்காக காத்திருந்த நால்வர் அவனோடு உள்ளே இருந்த தனியறைக்குச் சென்றனர்.
“என்ன வாயை திறந்தானா? இல்லையா?” என்றவனின் வார்த்தையிலே அவனது கோபத்தை உணர்ந்தவர்கள்,
“எவ்வளவு அடிச்சாலும் எனக்கு எதுவும் தெரியாதுனு தான் சார் சொல்றான்…” தயங்கியப்படி சொன்னவன் அர்ஜுன் பார்த்த பார்வையில் இரண்டடி பின்னே சென்றான்.
அறையினுள் தடிமனான கயிறு ஒன்றில் தலைகீழாக ஒருவனை கட்டித் தொங்கவிட்டிருந்தனர்.
அவன் கைகளும் பின்னால் கட்டப்பட்டிருக்க அரையுயிராய் இருந்தவனின் அருகில் சென்ற அர்ஜுனோ அவன் கண்களில் தெரிந்த மரண பயத்தைக் கண்டு இதழ் பிதுக்கியவன்,
“உயிர் மேல ஆசை இருக்கிறவன் எதுக்குடா இன்னும் உண்மைய சொல்லாம இருக்க?” என்று கர்ஜித்தப்படியே அவன் கன்னத்தில் தன் கையிலிருந்த சிகரெட்டை வைக்க அவனோ சூடு தாங்காது அலறினான்.
தன் மொபைலிலிருந்த போட்டோவைக் காட்டியவன், “கடைசியா ஒரு வாய்ப்பு தர்றேன், போட்டோவ நல்லா பார்த்துட்டு சொல்லு?” என்று அழுத்தமாகச் சொல்ல,
அவனோ, “சத்தியமா எனக்கு தெரியாது சார், நான் பார்க்கவே இல்லை…” என பதற,
அதில் எரிச்சலுற்றவன் அந்த நேரம் அங்கே வந்த அவனது பிஏ சிவாவைப் பார்க்க அவனும் அர்ஜுனின் பார்வையை உணர்ந்து வெளியே சென்றவன் அடுத்த நிமிடம் ஒரு கண்ணாடி பெட்டகத்தோடு உள்ளே நுழைந்தான்.
அங்கே தொங்கிக் கொண்டிருந்தவனுக்கு அடியில் அந்த பெட்டகத்தை வைக்க அதை பார்த்தவனுக்கோ மரணம் கண் முன்னே தெரியவும் விதிர்விதிர்த்துப் போனவன் உயிரை காத்துக்கொள்ள அலறினான்.
“சார் நான் சொல்றது உண்மை சார், எனக்கு சத்தியமா தெரியாது. என்னை நம்புங்க…” என்று கத்த,
அர்ஜுன் மற்றொருவனைப் பார்க்கவும் அவன் கயிற்றை கொஞ்சம் கொஞ்சமாக கீழிறக்கவும் தொங்கிக் கொண்டிருந்தவன் கண்ணாடி பெட்டகத்துக்கு அருகே நெருங்க அதிலிருந்த கொடிய நாகம் இரண்டும் அவனை நோக்கி எழவும் அவனோ அலறினான்.
பாவம் அவன் மட்டும் என்ன செய்வான்? உண்மை தெரிந்தால் தானே சொல்வதற்கு.
அவனுக்கு உண்மைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்த சிவா அர்ஜுனிடம், “சார் அவனுக்கு உண்மையாவே தெரியாதுனு தோணுது சார்…” என்று சொல்ல,
அவனைப் பார்த்த அர்ஜுன், “உண்மை தெரியாதவன் உயிரோட இருந்து மட்டும் என்ன பண்ண போறான்?” நக்கலாக சொன்னவன் அருகிலிருந்தவனிடம் கண்ணசைக்க அவனும் கயிற்றை இறக்கி விடவும் அந்த நாகங்கள் அவன் கண்களிலே தீண்ட சில நிமிடங்களிலே அவன் உயிர் பறி போனது.
சிவாவிற்கு பரிதாபம் எழுந்தாலும் அதை அர்ஜுனிடம் சொல்லும் தைரியம் இல்லாது நிற்க,
அவனைப் பார்த்த அர்ஜுன், “இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படியே எதுவும் தெரியாதவனுங்கள பிடிச்சு விசாரிச்சிட்டு இருக்கிறது? சீக்கிரம் கண்டுபிடி…” என கட்டளையிட்டு செல்ல சிவாவும் பின்னே சென்றான்.
“சார் இன்னைக்கு ஈவினிங் நேசிகா மேடம் கூட மீட்டிங் ஃபிக்ஸ் பண்ணியிருக்கு…” என்று நினைவுப்படுத்த அவனும் தலையசைத்துவிட்டு தன் காரில் ஏறி சென்று விட,
அங்கே அந்த நேசிகா என்பவளோ அர்ஜுன் காட்டிய அதே புகைப்படத்தை வைத்து வேறொருவனிடம் விசாரித்துக் கொண்டிருந்தாள்.
“யார் நீங்க? எதுக்காக என்னை கடத்திட்டு வந்து வச்சிருக்கிங்க?” சுற்றியிருக்கும் பயில்வான்களைக் கண்டு அச்சத்தோடு கேட்டவனை நேசிகாவின் ஆட்கள் பலமாக கவனித்தனர்.
அடி தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தவனின் மார்பில் ஹைஹீல்ஸ் அணிந்திருந்த தன் காலை வைத்து அழுத்தியவள் போட்டோவைக் காட்டி வினவ அதைப் பார்த்து அதிர்ந்தவனோ, “எனக்கு தெரியாது…” என்றான்.
அவனது பதிலில் ஆத்திரமுற்றவள் தன் காலை பலமாக அழுத்த கூர்மையாக இருந்த அவளது காலணி அவனது மார்பை கிழிக்கத் தொடங்கியது.
வலி தாங்காமல் அலறியவன், “சத்தியமா எனக்கு தெரியாது மேடம்…” என்று சொல்ல,
“தெரியாம தான் பத்து லட்சம் பணம் வாங்கியிருந்தியா?” என்று கேட்டவளின் கர்ஜனையில் நடுங்கியவனோ,
அதில் மேலும் அதிர்ந்தவன், “அவங்களை கொல்ல நான் பணம் வாங்குனது உண்மை தான் மேடம். ஆனா, நான் போறதுக்குள்ள மிஸ் ஆகிட்டாங்க…” என்றவனை கொலைவெறியோடு பார்த்தவள் தன் காலை மேலும் அழுத்தவும் அவனின் அலறல் அந்த அறை முழுவதும் எதிரொலித்தது.
அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தன் ஆட்களிடம் உத்தரவிட்டு வெளியே வந்தவளின் மனமோ உலைக்களமாக கொதித்துக் கொண்டிருந்தது.
ஜி.கே கம்பெனி…
ஐந்து மாடி கட்டிடமாக உயர்ந்து நின்றது. நேரம் பத்தை நெருங்கவும் அவசர அவசரமாக ஊழியர்கள் உள்ளே நுழையத் தொடங்கினர்.
கார்த்திக்கும் தன் பைக்கை நிறுத்திவிட்டு கண்ணாடியை பார்த்து தன் தலை முடியை ஒதுக்கியவன் விசில் அடித்தப்படியே பைக் சாவியை சுழற்றிக் கொண்டு உள்ளே வந்தான்.
லிஃப்டில் ஏற போக அங்கே ஏற்கனவே நான்கு பெண்கள் இருக்கவும் அவர்களை பார்த்து புன்னகைத்தவன், “ஹாய் பியூட்டிஸ்…” என்றபடியே லிஃப்டிற்குள் நுழைந்தான்.
பதிலுக்கு புன்னகைத்த நீலா, “என்ன கார்த்திக் நேத்து சாமர்த்தியமா எஸ்கேப் ஆகிட்ட போல?” என்று கேட்க,
“அதென்ன அவனுக்கு புதுசா? எப்ப எஸ்கேப் ஆகணும்னு கரெக்டா தெரிஞ்சு வச்சிக்கிட்டு ஃப்ராடு தப்பிச்சுடுறான். பாவம் சுரேஷ்! இவன் வாங்க வேண்டிய எல்லா திட்டயும் அவன் வாங்கிட்டு இருந்தான்…” என்றாள் சாந்தி.
“திட்டு மட்டுமா வாங்குனான் அடியும்ல சேர்த்து கிடைச்சது…” மூன்றாவதாய் நின்றவள் சொல்ல கார்த்திக்கோ புன்னகையை மட்டுமே பதிலாக தந்தான்.
“எப்படிடா? உன் டெக்னிக்க கொஞ்சம் எங்களுக்கும் சொல்லி கொடுத்தா அந்த ராட்சசிக்கிட்ட திட்டு வாங்காம நாங்களும் தப்பிச்சுடுவோம்ல…” நீலா கேட்க,
“சீக்ரெட்டலாம் வெளிய சொல்ல முடியாது ஸ்வீட்டி…” என்றான் விரிந்த புன்னகையோடு.
“நேத்து லீவு போட்டதுக்கு இன்னைக்கு மாட்டணும்ன்றத மறந்துடாத தம்பி…” மற்றொருவள் எச்சரிக்கை கொடுக்கவும்,
“அதலாம் எப்படி சமாளிக்கிறதுனு ஐயாவுக்கு தெரியும்…” சட்டை காலரைத் தூக்கி விட்டு கெத்தாகச் சொல்ல,
“பார்க்கிறோம்டா எத்தனை நாளைக்கு சமாளிக்கிறனு? ஒரு நாள் இல்லை ஒரு நாள் அவகிட்ட மாட்டிக்கிட்டு துண்டை காணும் துணிய காணும்னு நீ ஓடல…” நீலா சொல்லவும்,
“உங்களுக்கு ஏன்டி அவன் மேல பொறாமை?” என எரிந்து விழுந்த ஷீலா,
கார்த்திக்கிடம், “டேய் கார்த்திக்! இவளுங்க பேச்சலாம் நீ கண்டுக்காத, உன்னோட திறமைய பார்த்து பொறாமையில பேசுறாங்க…” என்று பரிந்து பேசியவளைக் கண்டு அவனது வசீகர புன்னகையை சிந்த,
அதில் சிலிர்த்தவளோ, “உன் அழகுக்கும் அறிவுக்கும் நீ எங்கே இருக்க வேண்டியவன் தெரியுமா?” அவள் சிலாகித்து கூற,
“எங்கே பேபி இருக்கணும்?” அவனும் ஆவலோடு கேட்க,
தன் நெஞ்சத்தை சுட்டி காட்டியவளோ, “இங்கே இருக்கணும் கார்த்திக்…” என்றாள் மெல்லிய குரலில்.
“ஹவ் ஸ்வீட்!” என வியந்தவன்,
“பட், டூ யூ நோ ஒன்திங்?” என்றதும்,
அவள் என்ன என்பது போல பார்க்க,
“ஒரு ஹார்ட்டுக்குள்ள ஒருத்தருக்கு தான் இடம் கொடுக்கணும். ஏற்கனவே உன் ஹார்ட்டுல இருக்க தீனாவ என்ன பண்ண போற?” என்று தன் ஒற்றை புருவம் உயர்த்த,
பேசிக்கொண்டே அலுவலகத்திற்குள் வந்திருந்ததால் தீனாவும் அங்கே வந்திருந்தவன் கார்த்திக் சொன்னதைக் கேட்டு ஷீலாவைப் பார்க்க,
அவளோ, “அவன் தான் பிரச்சினைனா சொல்லு டார்லிங், அவனை தூக்கி வெளிய போட்டுடுறேன்…” என்று தீனாவைப் பார்க்கவும் அவனோ நெஞ்சை பிடித்துக் கொண்டு சரிந்தான்.
“டேய்! டேய்! ஓவரா நடிக்காதடா…” அவனை கேலி செய்தவள்,
கார்த்திக்கிடம், “சொல்லு டார்லிங், தூக்கி போட்டுடட்டா?” என்று கேட்க,
அவனோ, “நாட்டி கேர்ள்…” என்று அவள் தலையை செல்லமாக ஆட்டிவிட்டு தன் இருக்கைக்குச் சென்றான்.
கார்த்திக், நேசிகாவின் பர்சனல் செகரட்டரியாக பணிபுரிகிறான். அவளின் கோபத்தைக் கண்டு எரிச்சலுறும் ஊழியர்கள் இவனின் குறும்புத்தனத்தில் மற்றதை மறந்து இலகுவாக இருப்பார்கள்.
அங்கே அனைவருக்கும் செல்லப்பிள்ளை என்று கூட அவனை சொல்லலாம். அனைவரிடமும் நட்போடு பழகுவான்.
“கார்த்திக் இன்னைக்கு லஞ்ச்க்கு கேன்டீன் போகாத. நானே உனக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்துருக்கேன், உனக்கு பிடிச்ச இறால் தொக்கு…” நீலா சொல்லவும்,
“கலக்குற ஸ்வீட்டி! மறக்காம வந்துடுறேன்…” அவன் சப்பு கொட்டியப்படி சொல்ல,
ஷீலாவோ, “அதை என் கையாலே ஊட்டி விடுறேன் டார்லிங்…” என்று கண்ணை சிமிட்ட,
“அது இன்னும் நல்லா இருக்குமே…” என்றான் அவன், தீனாவைப் பார்த்தப்படி.
“நீ நடத்து! உனக்கு வந்த வாழ்வு அப்படி…” அவன் புலம்ப கார்த்திக் சத்தமாக சிரிக்கவும் அந்த நேரம் எழுந்த காலடி சத்தத்தில் அனைவரும் கப்சிப்பென்று அமைதியாகிவிட கம்பீர நடையில் உள்ளே நுழைந்தாள் நேசிகா.
ஒரு பெண்ணுக்குரிய அத்தனை அம்சங்களையும் ஒருங்கே பெற்றிருந்தவளை அனைவரும் ஒரு முறையேனும் திரும்பிப் பார்த்து விட்டு தான் செல்வர். அவளின் அழகு அவளை நெருங்க நினைத்தாலும் அவளின் கூரியப் பார்வையோ மற்றவர்களை எட்டவே நிறுத்தி வைத்துவிடும்.
‘இவள் பெண் தானே’ என்ன செய்து விட போகிறாள் என துச்சமாக எண்ணியவர்கள் முன்னால் ‘நான் பெண்’ என்ன வேணாலும் செய்வேன் என்று நிரூபித்திருந்தாள் அந்த மங்கை.
அவளின் திறமையே அவள் மீது மற்றவர்களுக்கு மரியாதையை கொண்டு வந்திருந்தது.
ஊழியர்களிடம் எப்பொழுதுமே கடுமையாகவே நடந்துக் கொள்வதால் அவளுக்கு அவர்கள் வைத்த செல்லப் பெயர்கள் தான் ராட்சசி, காரப்பொடி, மிளகா பட்டாஸ், ஹிட்லர் இன்னும் பல…
உள்ளே நுழைந்தவளுக்கு அனைவரும் வணக்கம் செலுத்த சிறு தலையசைப்போடு அதை ஏற்றுக்கொண்டவள் தன் அறைக்குள் நுழையும் நேரம் ‘கார்த்திக்’ என்றபடியே உள்ளே நுழைய நீலா அவனை பார்த்து சிரித்தாள்.
“மகனே வசமா மாட்டுன…” அவள் பொறுமையாய் சொல்ல,
அவளை கண்டு புன்னகைத்தவன் பவ்யமாய் நேசிகாவின் அறைக்குள் நுழைந்தான்.
நேற்று அவன் விடுப்பு எடுத்ததைப் பற்றி கேட்டு அவனை குடையவில்லை.
“இன்னைக்கு என்னென்ன ஷெட்யூல் இருக்கு?” என்று வினவ,
அவனும் தன் குறிப்பேட்டைப் பார்த்து ஒவ்வொன்றாக சொல்லவும் அதை கவனமாக கேட்டவள்,
“ஈவினிங் சிக்ஸ் ஓ க்ளாக் ஏடி கம்பெனி அர்ஜுன் கூட மீட்டிங் இருக்கு, அதையும் ஆட் பண்ணிக்கோ. ஆஃப் ஹவர் முன்னாடி ரெடியா இரு…” அவள் கட்டளையிட,
‘இது எப்போ?’ என்பது போல புரியாமல் பார்த்தான் அவன்.
“காலேஜ கட்டடிக்கிற மாதிரி இஷ்டத்துக்கு ஆஃபிஸையும் கட் அடிச்சா ஆஃபிஸ்ல என்ன நடக்குதுனு எப்படி தெரியும் மேன்?” என எரிந்து விழுந்தவள்,
“இதுவே கடைசியா இருக்கட்டும்…” என எச்சரிக்கை கொடுக்க,
“மேம் அது…” அவன் தயங்க,
அவனை முறைத்தவள், “மத்தவங்க லீவு எடுத்தா சம்பளத்ததான் கட் பண்ணுவேன், இனி நீ லீவு எடுத்தா?” என்றவள் முடிக்கும் முன்னே அவன் பதற்றத்தோடு பார்க்க,
அவன் பதற்றத்தை கவனிக்காதவள் மடிக்கணினியை பார்த்தப்படியே, “வேறு வேலை தேட வேண்டியிருக்கும், மைண்ட் இட்…” என எச்சரிக்க அவனோ பாவமாய் பார்த்தான்.
‘ஹிட்லர்’ என அவன் வாய் முணுமுணுக்க,
“வாட்?”
“நத்திங் மேம்… எனிதிங் எல்ஸ்?” என்றவனை முறைத்தவள்,
“இங்கே பாஸ் நீயா இல்லை நானா?” என்று கேட்க,
“சத்தியமா நீங்க தான் மேம்…” பவ்யமாய் அவன் சொல்ல,
அவனை பார்வையிலே எரித்தவள் ‘கெட் அவுட்’ என்று உறும அவனும் அமைதியாய் வெளியேறினான்.
அவனின் முகத்தைக் கண்டு நீலாவும் சாந்தியும் சிரிக்க ஷீலாவோ, “ரொம்ப திட்டிட்டாங்களா பேபி?” என்றாள் கவலையாக.
புன்னகையோடு கண்ணை சிமிட்டியவன் நீலாவைப் பார்த்து, “நாங்களாம் யாரு? ஒரிஜினல் ஹிட்லரயே ஓரம் கட்டிடுவோம், இவங்களாம் எனக்கு ஜுஜுபி…” என சட்டை காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ள ஷீலா சிரிக்கவும் நீலாவும் சாந்தியும் முறைத்தனர்.
“டேய் அடங்குடா! டோர் க்ளோஸ் பண்ணாம போனதுனால அவங்க உன்னை திட்டுனது ஆஃபிஸ் முழுக்க கேட்டுடுச்சு…” நீலா சொல்லவும் திகைத்தவன் திரும்பிப் பார்க்க,
அங்கே அறை கதவின் அடியில் ஏதோ பொருள் தடுத்திருக்கவும் கதவு மூடாமலே இருந்தது. அது ஆட்டோமேட்டிக் டோர் என்பதால் அவனும் கவனிக்காமலே உள்ளே சென்றிருக்க அதன் பயனாய் அவன் வாங்கிய வசவுகள் மற்றவர்கள் காதிலும் விழ நேர்ந்திருந்தது.
சட்டென்று அங்கே சென்றவன் அங்கே இருந்த பொருளை எடுத்துப் பார்க்க அது அவனின் பேனா என்பது தெரியவும் மானசீகமாக தன் தலையிலே அடித்துக் கொண்டான்.
அசடு வழிந்தப்படி மற்றவர்களைத் திரும்பிப் பார்க்க அவனைக் கண்டு அனைவரும் கேலியாக சிரித்தனர்.
“நல்லா சிரிங்க, எனக்கும் நேரம் வரும்…” என அவன் பொறும,
“விடு டார்லிங், அவங்க வாங்குன திட்ட விட நீ கம்மியா வாங்கியிருக்கன்ற பொறாமையில பேசுறாங்க…” ஷீலா அவனை தேற்றவும் கார்த்திக் பாவமாய் நின்றான்.
“எனக்கு ஒரே ஒரு ஆசை தான்…” ஷீலா சொல்லவும்,
என்ன என்பது போல கார்த்திக் பார்க்க,
“மேடம் அப்பாவ பார்த்து ஒன்னே ஒன்னு மட்டும் கேட்கணும்?” ஷீலா சொல்ல,
“என்ன?”
“மேடம எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் ஒரு பர்சண்ட் கூட நேசம் காட்டுறவங்க மாதிரி தெரியலையே. அப்புறம் எப்படி அவங்களுக்கு நேசிகானு பேர் வைக்க தோணுச்சு? இந்த கேள்விய கண்டிப்பா அவங்க அப்பாகிட்ட கேட்கணும்…”
“அவங்க அப்பா இறந்துட்டாரே அப்புறம் எப்படி கேட்ப?” நீலா கேட்க,
“ஆமாம்ல நான் மறந்தே போய்ட்டேன். பரவாயில்லை நான் செத்ததுக்கு அப்புறமாது அவரை பார்த்து இந்த கேள்விய கேட்காம விட மாட்டேன்…” என அவள் சபதம் எடுக்க,
“எதுக்கு பேபி அதுவரைக்கும் வெயிட் பண்ணணும்?” கார்த்திக் கேட்கவும்,
“ஏன் இப்பவே இவளை மேல அனுப்ப போறியா?” நீலா நக்கலாய் கேட்க, ஷீலா அவளை முறைக்கவும்,
மறுப்பாகத் தலையசைத்தவன், “நம்ம ஹிட்லர்கிட்டயே கேட்டுடுவோம்…” என கண்ணை சிமிட்ட ஷீலா பதறினாள்.
“இதுக்கு நீ என்னை மேலயே அனுப்பிடலாம்…” பாவமாய் சொன்னவளைக் கண்டு புன்னகைத்தவன் நேசிகாவிடம் இருந்து அழைப்பு வரவும்,
அதை பார்த்துவிட்டு, “நீ கேட்க சொன்னதா கேட்டுட்டு வரட்டா பேபி?” என்றவனைக் கண்டு கையெடுத்துக் கும்பிட்டவள், “ஆளை விடு சாமி…” என்று ஓடியே விட்டாள்.
அவளின் செயலைக் கண்டு புன்னகையோடு உள்ளே சென்றவன் நேசிகாவிடம் பல வசவுகளை வாங்கி கட்டிக் கொண்டான்.
நேற்று அவன் இல்லாத நேரம் அவனுக்கு அடுத்த இடத்தில் இருந்தவன் ஏகப்பட்ட தவறுகளை செய்திருக்க அதற்கான பலனை கார்த்திக் இப்பொழுது அனுபவித்துக் கொண்டிருந்தான்.
அவள் திட்ட திட்ட அமைதியாய் வாங்கிக் கொண்டானே தவிர மறுவார்த்தை பேசவில்லை மன்னிப்பும் கேட்கவில்லை. இந்த முறை கதவு சாத்தியிருந்ததால் வெளியே யாருக்கும் கேட்காது என்ற நிம்மதியோடு நின்றிருந்தான்.
அவனை திட்டி திட்டி ஓய்ந்துப் போனவளிடம் தண்ணீர் பாட்டிலை எடுத்து அவன் நீட்ட அவனை முறைத்தாலும் அவளுக்கு அது தேவைப்பட்டதால் மறுக்காது வாங்கி நீரை பருகினாள்.
‘இப்போ கன்டினியூ பண்ணுங்க…’ என்பது போல அவன் பார்க்க,
அதில் கடுப்பானவளோ ‘கெட் அவுட்’ என்று கத்தினாள்.
பாவமாய் பார்த்தப்படி அவன் நகரவும் கையிலிருந்த ஃபைலை டேபிளில் போட்டவள், “சீக்கிரம் இதை சரி பண்ணி கொண்டு வா…” என கட்டளை இட அவனும் தலையாட்டியப்படி ஃபைலை எடுத்துக் கொண்டான்.
“***** கன்ஸ்ட்ரக்ஷன்ல இருந்து அமௌண்ட் கரெக்டா வந்துடுச்சானு செக் பண்ணிடு…”
“ஓகே மேம்…” என்றவன் இன்னும் ஏதேனும் வேலை இருக்கிறதா என்பது போல அவளை பார்க்க அவனை போக சொல்லி தலையசைத்தவள் தன் வேலையை கவனிக்கத் தொடங்க பெருமூச்சு ஒன்றை வெளியிட்டப்படி தன் இருக்கைக்கு வந்தமர்ந்தான்.
நேரம் நகர்வதே தெரியாமல் வேலையில் மூழ்கிவிட ஷீலா வந்து அவனை அழைத்தாள்.
“டைம் ஆச்சு கார்த்திக், சாப்பிட போகலாம் வா…” என அழைக்க,
அவளை பார்த்தவன், “இத முடிச்சு கொடுத்துட்டு வந்துடுறேன் ஷீலா, நீங்க சாப்பிடுங்க…” என்றதும்,
“சரி உனக்காக வெயிட் பண்றோம், மறக்காம வந்துடு…” அவள் நகர்ந்து விட தன் வேலையை முடித்து விட்டு நேசிகாவின் அறைக்குள் நுழைந்தான்.
கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தவன் அவளிடம் ஃபைலை ஒப்படைக்க, “வச்சிட்டு போ…” என்றாள்.
“ஒரு முறை செக் பண்ணிடுங்க மேம்…”
“நீ பார்த்துட்ட தான?” மடிக்கணினியை பார்த்தப்படியே அவள் கேட்க,
“பார்த்துட்டேன் மேம்…” என்றவனிடம்,
“சரி போ…” என்றாள் அவள் அவன் மீதிருந்த நம்பிக்கையில்.
“***** கம்பெனி அமௌண்ட் வந்துடுச்சு மேம். பட் **** கம்பெனி அமௌண்ட் இன்னும் வர்ல…” என்று சொல்ல,
சட்டென்று அவனைப் பார்த்தவள், “என்ன சொல்றீங்க? வந்துடுச்சுனு அக்கவுண்டண்ட் சொன்னாங்களே…” குழப்பத்தோடு அவள் கேட்க,
‘சொன்னா அப்படியே நம்பிடணுமா? செக் பண்றது இல்லையா?’ உள்ளுக்குள்ளே கறுவிக் கொண்டாலும் அவளிடம் சொல்லாது,
“அவங்கள தான் கேட்கணும்…” என்றான் அமைதியாய்.
“எல்லாத்தையும் நானே கேட்கணும்னா நீ எதுக்கு இருக்க?” கோபமாய் அவள் கத்த,
‘உங்ககிட்ட திட்டு வாங்க தான இருக்கேன்’ என தனக்குள்ளே புலம்பியவன்,
“சாரி மேம் நேத்து நான் வராததுனால எனக்கு தெரியல…” பவ்யமாய் சொன்னவனை ஏகத்துக்கும் முறைத்தாள்.
‘அச்சோ இதுக்கும் சேர்த்து கத்துவாங்களே’ அவன் நினைக்கும் போதே அவள் கத்தத் தொடங்கினாள்.
“உன்னால எனக்கு தலைவலி தான் மிச்சம். போ அது என்னனு பாரு. அக்கவுண்டண்ட் மேல தப்புனா யோசிக்காம அவங்கள ஃபயர் பண்ணிடு…” என உத்தரவிட அவனும் தலையாட்டினான்.
இன்னும் அவன் நகராமல் இருப்பதைக் கண்டு என்ன என்பது போல பார்க்க,
“லஞ்ச் டைம்…” என்று நினைவுப்படுத்தினான்.
“சோ?”
“சாப்பிட்டு முடிச்சுட்டு ஒர்க் பார்க்கலாமே…”
கடுப்பானாலும், “சரி போய் சாப்பிட்டே பாரு…” என்றாள்.
“நான் உங்களை சொன்னேன்…”
அவள் முறைக்கவும், “டைம் ஆச்சு மேம், வாங்க…” என்றவன்,
அந்த அறையின் ஓரத்தில் இருந்த டேபிளில் வீட்டிலிருந்து அவளுக்காக வந்திருந்த உணவு கூடையை எடுத்து வைக்க,
“மிஸ்டர்! உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரு…” என்று அவள் சீற,
“இதுவும் என் வேலை தான் மேம், நீங்க சாப்பிட்டு ஹெல்தியா இருந்தா தான எனக்கு வசதி…” அவன் சொல்லவும்,
“வாட்?”
“அது நான் என்ன சொல்ல வர்றேன்னா? சம்பளம் கொடுக்கிற நீங்க ஆரோக்கியமா இருக்கிற வரைக்கும் தான எங்களுக்கு வேலையும் சம்பளமும் கிடைக்கும்…” என்று பம்மியவன்,
‘கொஞ்சம் ஓவரா பர்ஃபாமென்ஸ் பண்ணிட்டமோ?’ என பதற,
அவளோ அவனது செயலில் எரிச்சலுற்றாலும் தன் பசியை உணர்ந்தவள் அமைதியாய் வந்தமர்ந்தாள். இது வழக்கமாய் நடக்கும் ஒன்று தான். பசி தாகம் மறந்து வேலையிலே மூழ்கிப் போகிறவளுக்கு நினைவுப்படுத்துவதே அவனின் முக்கிய வேலையாகியிருந்தது.
“சரி நீ போ, நான் பார்த்துக்கிறேன்…” என அவனை அனுப்பி விட்டு உணவில் கவனம் செலுத்தினாள்.
அவனும் வெளியே வந்தவன் தன் கூட்டத்தோடு ஐக்கியமாகிவிட்டான்.
வழக்கமாக கேண்டீனில் சாப்பிடுபவனை இன்று ஷீலாவும் நீலாவும் அழைத்திருந்ததால் அவர்களோடு வந்தமர்ந்தவனிடம் அனைவரும் தங்கள் உணவை பகிர்ந்துக் கொண்டனர்.
அவர்கள் அன்பில் நெகிழ்ந்தாலும் அவன் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவர்கள் நேரமாவதை உணர்ந்து தங்கள் இடத்திற்கு வர அக்கவுண்டன்ட் அருகில் வந்தமர்ந்த கார்த்திக்,
“சாப்பிட்டிங்களா மிசஸ் சித்ரா?” என்று வினவவும்,
“சாப்பிட்டேன் கார்த்திக்…” என்றவள் தன் வேலையை கவனிக்க,
அந்த நேரம் தன் இருக்கையில் வந்தமர்ந்த நீலாவிடம் திரும்பியவன், “மிசஸ் சித்ரா சார்பா ஒரு ரெசிக்னேஷன் லெட்டர் ரெடி பண்ணுங்க மிஸ் நீலா…” என்று கட்டளையிடவும் நீலா புரியாமல் பார்க்க சித்ராவோ அதிர்ச்சியோடு பார்த்தாள்.
“என்ன மிஸ் நீலா? உங்ககிட்ட தான் சொல்றேன் சீக்கிரம் ரெடி பண்ணுங்க. அப்படியே சித்ரா இடத்துக்கு மிஸ்டர் சுரேஷ ப்ரமோட் பண்ற ஆர்டரையும் ரெடி பண்ணுங்க. ம்ம் க்வீக்…” என்று கட்டளையிட நீலா அவன் சொன்ன பணியை செய்ய சித்ராவோ அவனை பதற்றத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இப்ப சொல்லுங்க மிசஸ் சித்ரா? *** கம்பெனிக்கிட்ட இருந்து உங்களுக்கு எவ்வளவு கமிஷன் கிடைச்சது?” நேரடியாக அவன் கேட்க,
அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தாலும் மாட்டிக்கொண்ட பிறகு மறைத்து என்ன பயன்? அதனால் அவளும் நடந்ததை சொல்லிவிட்டாள்.
***** கன்ஸ்ட்ரக்ஷன் ஜிகே கம்பெனிக்கு கொடுக்க வேண்டிய தொகையை கொடுத்ததாக கணக்கு காட்டிவிட்டு அவர்களிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக பெற்றிருந்தாள் சித்ரா.
இது சம்மந்தமான வேலைகளை கண்காணிக்கும் பொறுப்பை கார்த்திக் வசம் ஒப்படைத்திருந்ததால் நேசிகா நேரடியாக தலையிடுவதில்லை. அது சித்ராவிற்கு வசதியாக இருந்தது.
நேற்று அவன் விடுப்பில் இருந்தது வேறு சாதகமாகிவிட எப்படியாவது அவனை ஏமாற்றிவிடலாம் என்று எண்ணியிருந்தவளோ நிச்சயமாக அடிமுட்டாளே அன்றி வேறென்ன சொல்ல?
தன் கணவனுக்கு வேலை போய்விட்டது குடும்ப சூழல் என ஏதேதோ காரணம் சொல்ல கார்த்திக் மசியவே இல்லை.
எப்பொழுதும் மற்றவர்களிடம் சிரித்து பேசி கலகலப்போடு இருப்பவன் தவறு என்று வந்துவிட்டால் அடியோடு மாறிவிடுவான்.
தன்னை நம்பி ஒப்படைத்திருக்கும் பொறுப்பை சரிவர செய்ய வேண்டும் என்பதே அவன் எண்ணம். தெரியாமல் தவறு செய்பவர்களை மன்னித்துவிடலாம், தெரிந்தே செய்பவர்களை என்ன செய்வது?
நீலா அவன் சொன்னதை செய்து முடித்து அவனிடம் பேப்பரை நீட்ட அதை வாங்கி பார்த்தவனோ, “உனக்கு என் மேல எதாவது கொலைவெறி இருந்தா சொல்லிடு ஸ்வீட்டி, எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம். இப்படி என்னை அந்த ஹிட்லர்கிட்ட கோர்த்து விடாத, மீ பாவம்…” பரிதாபமாய் அவன் சொல்ல,
“என்ன கார்த்திக் நான் என்ன பண்ணேன்?” புரியாது அவள் கேட்க,
“என்ன டைப் பண்ணியிருக்கனு பாரு. இதை நான் அப்படியே கொண்டு போய் அவங்ககிட்ட நீட்டுனா ஒரு லெட்டர் கூட டைப் பண்ண தெரியாத மடையனுக்கு பிஏ வேலை எதுக்குனு என் மூஞ்சுலையே தூக்கி எறிவாங்க…” பாவமாய் அவன் முகத்தை வைத்து சொல்ல,
அதை வாங்கிப் பார்த்தவள், “அட! ஒரு ஏ மாறி போச்சு. ஒரு எழுத்து தான, இரு மாத்தி அடிச்சு தர்றேன்…” என்றதும்,
“ஒரு எழுத்தால என் தலையெழுத்தையே மாத்திடுவாங்களே…” என்று புலம்பியவனிடம் சில நிமிடங்களிலே அவள் வேறு ஒரு பேப்பரை நீட்ட,
“ம்ம் குட்! அப்படியே **** கம்பெனி ரூல்ஸ் ப்ரேக் பண்ணதுனால அவங்ககூட நாம போட்ட அக்ரீமெண்ட கேன்சல் பண்றதுக்கான டாக்குமெண்ட் ரெடி பண்ணிடு…” என்றதும் அவனை பார்த்தவளோ அவன் சொன்னதை தட்டாது செய்து முடித்து ஒப்படைக்க,
அதை வாங்கிக் கொண்டு எழுந்தவனைத் தடுத்த சித்ரா, “கார்த்திக் என்னை மன்னிச்சிடு. ப்ளீஸ்! இந்த நேரத்துல இந்த வேலையும் இல்லனா எனக்கு கஷ்டம்…” என அவள் கண்ணீர் வடிக்க,
“நீங்க பண்ணதுக்கு போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கணும், அதை பண்ணலையேனு சந்தோஷப்படுங்க. அதுவும் உங்க குழந்தைங்கள மனசுல வச்சிக்கிட்டு தான் பண்ணல.
நீங்களா வேலையை விட்டு போற மாதிரி தான் பண்ணியிருக்கு. வேற வேலை தேடுறதுல உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. பட் அப்படி போற இடத்துல அவங்களுக்காது உண்மையா இருங்க…” என்று எச்சரித்துவிட்டு நேசிகாவின் அறைக்குச் சென்றான்.
கார்த்திக் கொடுத்த டாக்குமெண்டையும் கடிதத்தையும் வாங்கி பார்த்த நேசிகாவிற்கு என்ன நடந்திருக்கும் என்பது புரிய அவனிடம் எதுவும் கேட்காது அதில் கையெழுத்திட்டு நீட்ட அதை வாங்கிக் கொண்டு நகர்ந்தவனைத் தடுத்தவள்,
“நீ பண்ண தப்புக்கு நீயே போய் அந்த டாக்குமெண்ட அவங்ககிட்ட ஒப்படைச்சிட்டு அவங்க கொடுக்க வேண்டிய பணத்தையும் ஒரு ரூபா கூட பாக்கி இல்லாம வசூல் பண்ணிட்டு வா…” என்று உத்தரவிட அவனும் அமைதியாய் தலையசைத்தான்.
‘ஒருநாள் லீவு போட்டதுனால என்னலாம் பண்ண வேண்டியிருக்கு’ என புலம்பியப்படியே வெளியே வந்தவன்,
சுரேஷை அழைத்து விவரம் கூறி சித்ராவிடம் அந்த கடிதத்தைக் கொடுத்துவிட்டு, “இன்னைக்கு ஈவினிங்கே உங்க செட்டில்மெண்ட வாங்கிக்கிட்டு கிளம்புங்க…” என்றான்.
“அப்போ அந்த கம்பெனிகிட்ட இருந்து இவங்க வாங்குன பணம்?” தீனா கேட்கவும்,
“அதை அவனுங்களே வாங்க வேண்டிய விதத்துல வாங்கிப்பாங்க…” என்றதும் சித்ராவிற்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது.
“சரிடா இவங்க வேலையை சுரேஷ்கிட்ட ஒப்படைச்சிட்ட, அப்போ சுரேஷ் வேலையை யாரு பார்க்கிறது? நீ இல்லாத நேரம்லாம் அவன் தான மேடம்கிட்ட மாட்டிக்கிட்டு முழிச்சான்….” என்றதும்,
“அதுக்கு ஒரு அப்பாவி சிக்கிட்டான்டா. அவனை வச்சிக்க வேண்டியது தான்…” என்றான்.
“யாருடா அவன்? மேடம் பத்தி தெரிஞ்சும் சம்மதிச்சானா?” நம்பாமல் கேட்க,
“சம்மதிக்கிறத தவிர வேற வழி இல்லையே…” என்றவனிடம்,
“யாருடா அந்த துர்பாக்கியசாலி?” என்று வினவவும்,
“இன்னுமாடா தெரியல, சாட்சாத் நீயே தான்…” என்று கண்சிமிட்ட,
“ஏன்டா? ஏன்? நீ படுற கஷ்டத்தை நானும் படணுமா? எனக்கு உன் அளவுக்கு எஸ்கேப் ஆகுற திறமை கூட இல்லையேடா…” பரிதாபமாய் அவன் சொல்ல,
“வேற வழி தெரியல மச்சி…” என்றவன் நேசிகா சொன்ன வேலையை கவனிக்க ஓடிவிட்டான்.
மாலையில் நேசிகா சொன்ன நேரத்திற்கு அவள் அறைக்குச் சென்றவன் அவளோடு சேர்ந்து அருகிலிருந்த ஹோட்டல் ஒன்றிற்குச் சென்றான்.
அவர்கள் செல்வதற்கு முன்பாகவே அங்கே வந்திருந்த அர்ஜுன் நேசிகாவை கண்டு இகழ்ச்சியாக உதட்டை சுழித்தாலும் அவன் பார்வையோ அவளை மேலிருந்து கீழ் வரை அளவிட்டது.
அவனை அலட்சியமாக பார்த்தவள் அவன் முன்னால் இருந்த இருக்கையில் அமர கார்த்திக்கும் அவளருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தான்.
“சொல்லுங்க மிஸ்டர் அர்ஜுன், என்ன விஷயமா பார்க்கணும்னு சொன்னீங்க?” நேரடியாக அவள் கேட்க,
“என்ன விஷயம்னு நான் சொல்லி தான் தெரியணுமா மிஸ் நேசிகா?” நக்கலாய் அவன் புருவம் உயர்த்த அதில் அவள் கடுப்பானாலும் வெளியே காட்டிக் கொள்ளாது,
“அதுக்கு நான் என்ன பதில் சொல்லுவனு தெரிஞ்சும் மீட்டிங் ஏற்பாடு பண்ணியிருக்கிங்களே, அது தான் ஏன்னு புரியல…” என்றாள்.
“இங்கே பாரு, தேவையில்லாம என் விஷயத்துல மோதாத. இதோட பின்விளைவுகளை நீ நினைச்சு கூட பார்க்க முடியாது…” அவன் எச்சரிக்கவும்,
“ப்ச் எத்தனையோ மிரட்டல்களை பார்த்தாச்சு வேற டிரை பண்ணுங்க…” அலட்சியமாய் பதிலளித்தவள் கார்த்திக்கை பார்க்க அவன் சில கோப்புகளை அவளிடம் நீட்டினான்.
அதை வாங்கியவள் அர்ஜுனிடம், “NJ அகாடெமில உன் ஷேரை தவிர மத்தது எல்லாம் வாங்கியாச்சு. உனக்கு விருப்பம் இருந்தா உன்னுடையதையும் கொடுத்துட்டு போய் மத்த தொழிலை பாரு. இல்லனா நானும் ரெடி, நேருக்கு நேர் மோதிக்கலாம்…” என்று ஃபைலை கொடுக்க அதை வாங்கி பார்த்தவன் தன் பிஏ சிவாவை முறைத்தான்.
மற்றவர்களின் பங்குகளை அர்ஜுன் தான் வாங்க நினைத்திருந்தான். நினைத்தது மட்டுமல்ல பேசி முடிவு செய்து கையெழுத்து போடுவது மட்டும் தான் பாக்கியாக இருந்தது. நேசிகாவும் சம்மதித்திருந்தால் எப்பொழுதோ வேலை முடிந்திருக்கும்.
அவளால் தாமதமாகிறதே என்று அவன் கடுப்போடு இருக்க அவளோ மற்றவர்களின் பங்குகளை எழுதியே வாங்கிவிட்டாளே. எப்படி நடந்தது? என புரியாமலும் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத ஆத்திரத்திலும் சிவாவை முறைத்தவன் நேசிகாவையும் முறைக்க,
“சாரி மிஸ்டர் அர்ஜுன்! எங்கப்பாவோட கனவுகள உங்க மூலமா அழியறதுக்கு நான் விட மாட்டேன். உங்களுக்கு விருப்பம் இருந்தா உங்க ஷேரையும் கொடுக்கலாம். மத்தவங்களுக்கு கொடுத்தத விட ரெண்டு மடங்கு அதிகமாவே தர்றேன். இல்லை முடியாது எனக்கு தான் வேணும்னு பிடிவாதம் பிடிச்சா அதை எப்படி வாங்கணும்னு எனக்கும் தெரியும்…” என்று திமிராக சொல்லிவிட்டு எழ கார்த்திக்கும் எழுந்தான்.
“ஏய்! நான் யாருன்னு தெரியாம மோதுறடி…” ஆத்திரத்தில் மரியாதையின்றி அவன் பேச,
அதில் உண்டான ஆத்திரத்தில் அவனை அடிப்பதற்கு கையை ஓங்கியவள் இருக்கும் இடத்தை உணர்ந்து தன் கோபத்தை குறைத்து, “மைண்ட் யுவர் வேர்ட்ஸ்…” என்று சீறிவிட்டு விறுவிறுவென வெளியேறினாள்.
செல்லும் அவளையே ஒரு வித குரோதத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவனின் பார்வை விஷமமாக மாறவும், “ஷீ ஈஸ் வெரி ஹாட்…” என்று சொல்ல,
நேசிகா மறந்து விட்டு சென்ற அவளது கைப்பையை எடுத்த கார்த்திக் அர்ஜுன் சொன்னதைக் கேட்டு சிறிது தூரம் சென்றிருந்த நேசிகாவைப் பார்த்தவன் திரும்பி அர்ஜுனைப் பார்த்து புன்னகைத்தான்.
“யெஸ் சார், யூ ஆர் ரைட். ஷீ ஈஸ் வெரி ஹாட். பக்கத்துல போயிடாதிங்க சூடு தாங்காம எரிஞ்சுடுவிங்க…” என்று புன்னகை முகம் மாறாது சொல்ல அர்ஜுனின் முகம் இறுகியது.
“அனுபவமோ?” நக்கலாக கேட்க,
“மலை உச்சியில இருந்து கீழ விழுந்தா உயிர் போகும்னு சொல்றதுக்கு அனுபவம் தேவையில்லையே, கொஞ்சமே கொஞ்சம் அறிவு இருந்தா போதும்…” அவனும் அதே நக்கல் தொனியில் குத்திக்காட்ட ஆத்திரத்தில் அவனின் சட்டை காலரை பற்றியிருந்தான் அர்ஜுன்.
நிதானமாக அர்ஜுனின் கரத்தை தன் சட்டையிலிருந்து பிரித்தெடுத்தவன், “வர்றேன் சார், பை…” என்று விடைபெற,
அர்ஜுனோ ஆத்திரத்தில் பல்லைக் கடித்தான். இதுவரை நேசிகாவை மட்டுமே வன்மத்தோடு நினைத்திருந்தவன் இப்பொழுது கார்த்திக்கையும் நினைக்கத் தொடங்கினான்.
காருக்கு அருகில் நின்ற நேசிகா, “உனக்காக நான் வெயிட் பண்ணிட்டு இருக்கணுமா?” என எரிந்து விழுந்தவளிடம் அவன் அமைதியாய் அவளது கைப்பையை நீட்ட அதை வாங்கியவள்,
“அவன்கிட்ட உனக்கென்ன பேச்சு?” என்றாள் அடக்கப்பட்ட சினத்துடன்.
“அது வந்து…” என தயங்கியவன் அவள் பார்த்த பார்வையில் அர்ஜுன் பேசியதை சொல்ல அதில் கோபம் கொண்டவள் அவன் கன்னத்திலே அறைந்துவிட கார்த்திக் அதிர்ந்து நின்றான்.
இவளிடம் அடி வாங்கி விட கூடாதென்று தான் அவன் பொய்யான காரணம் சொல்லி அடிக்கடி விடுமுறை எடுப்பதே.
அவனை அடித்தவளோ கோபம் துளியும் குறையாது காரில் ஏறி சென்றுவிட கார்த்திக் அப்படியே நின்றான்.
அவனுக்கு பின்னாடி சற்று தூரத்திலிருந்த அர்ஜுன் நக்கலாக சிரிப்பது போல தோன்றவும் வேகமாக வெளியேறி ஆட்டோ பிடித்து சென்றவனுக்கு தெரியவில்லை வேறு இரு விழிகளும் அவனை பார்த்துக் கொண்டிருந்ததை.
அர்ஜுன் சிவாவைப் பார்க்க அவன் பார்வையின் அர்த்தம் உணர்ந்தவனும் அன்றிரவே கார்த்திக்கை தன் ஆட்கள் கொண்டு கடத்தியிருந்தான்.
**********